இலக்கும் அதற்கான செயற்திட்டங்களும்

இலக்கும் அதற்கான செயற்திட்டங்களும்

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகியவற்றின் அடிப்படையில் நல்வழி நடந்த ஆரம்பகால நல்லோர்கள் விளங்கிய வழியில்  போதிப்பதே இப்னு அப்பாஸ் அரபு கல்லூரியின் பிரதான குறிக்கோளாகும். கல்வி கற்றல், அதன்படி ஒழுகுதல், அதன் மூலம் மற்றோரை வழி நடாத்தல் ஆகிய மூன்று விழுமியங்கள் இணைந்த இலட்சியம் கல்லூரியின் இலச்சினையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சிறந்த அறிவைப் பெறுவதுடன் சீரிய ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள உலமாக்களாக மாணவர்கள் உருவாக வேண்டுமென்பதில் இங்கு கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது.

ஷரீஆ (மௌலவி, ஆலிம்), அல்குர்ஆன் மனனம் ஆகிய இரு பிரிவுகளைக் கொண்டதாக இக்கல்லூரி இயங்குகின்றது. இதில் பிரதானமானதாகிய ஷரீஆப் பிரிவின் மாணவர் தொகை 90ஆகவும் மனனப் பிரிவின் தொகை 40 ஆகவும் தற்போதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

7 வருட கால எல்லையைக் கொண்ட ஷரீஆப் பிரிவின் பாடத் திட்டம் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தைத் தழுவியதாகும்.

மேலும், அதில் கல்விப் பொதுத் தராதர சா.த, உ.த பரீட்சைகளுக்கான பாடங்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் உயர் வகுப்பு மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பப் (கம்பியூடர்) பாட நெறிகளும் போதிக்கப்படுகின்றன. இங்கு கம்பியூடர் பயிற்சி நெறியைக் கற்றுத் தேரும் மாணவர்களுக்கு அதற்கென பிரத்தியேகமான சான்றிதழ்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

2014ம் ஆண்டு முதல் ‘அல் ஆலிம்’ அரசாங்கப் பொதுப்பரீட்சைக்கும் மாணவர்கள் தோற்றுவதுடன் ‘தர்மாச்சாரய’ பொதுப் பரீட்சைக்கும் தற்போது தோற்றுகின்றனர்,

மேலும் அல்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர்களுக்கு மேலதிக இணைந்த பாடமாக சில பொதுப்பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

இங்கு பல மொழிகள் போதிக்கப்படினும் உலமாக்கள் மிக ஆழமாகவும் நுணுக்கமாகவும் அறிந்திருக்க வேண்டிய மொழி என்ற அடிப்படையில் மாணவர்கள் அரபுமொழியில் புலமைத்துவம் பெறவேண்டுமென்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது .

வருடாந்தம் முதலாம் தவணை, இரண்டாம் தவணை என இரு பிரதான பரீட்சைகள் நடைபெறும் அதே வேளை, இறுதியாண்டுப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அரபு மொழியில் ஆய்வு ஒன்றை சமர்ப்பிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இது அல்-உஸ்தாத் எம். ஏ. ஏ. எம் ளபர் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. 2000ம் ஆண்டுமுதல் அமுலிலிருக்கும் இத்திட்டத்தின கீழ் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு, சட்டக்கலை, சமூகப் பிரச்சினைகள் என பல முக்கியத் தலைப்புகளில் 141 ற்கும்  மேற்பட்ட பெறுமானம் மிக்க ஆய்வுகள் எமது மாணவர்களினால் எழுதப்பட்டுள்ளன,

அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் நடாத்தப்படும் கல்விக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தமது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. அவற்றில் பல கருத்தரங்குளில் எமது மாணவர்கள் முதலிடம் பெற்று திறமைகாட்டியள்ளனர், 70ம் மேற்பட்ட கல்லூரிகள் பங்குபற்றிய அகில இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியத்தினால தேசிய ரீதியில் 2012ம் ஆண்டு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மாணவர் மட்டம், கல்லூரிகள் மட்டம் ஆகிய இரண்டிலுமே நாம் முதலிடம் பெற்றது முக்கிய நிகழ்வாகும் .

கடந்த பல வருடங்களாக க.பொ.த. சா த பரீட்சைக்குத் தோற்றிய இக்கல்லூரி மாணவர்களில் 80% க்கும் மேற்பட்டோர் சித்தியடைந்து க.பொ.த. உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். 2007ம் ஆண்டு முதல் க.பொ.த உ/த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று, அவர்களில் பலர் உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். மேலும் பலர் அரபு நாட்டுப் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியைப் பெறுகின்றனர், அவர்களுள் சிலர் தற்போது முதுமானிப் (M.A) பட்டப்படிப்பை முடுத்தோரும், தற்போது கலாநிதி (Phd) பட்டப்படிப்பை தொடர்வோரும் உள்ளனர்.

ஆளுமை விருத்திச் செயற்பாடுகள்:

வாராந்தம் நடத்தப்படும் அரபு, தமிழ் மொழிகள் மூலமான வெவ்வேறு மாணவர் மன்றங்கள், மாதமொரு முறை நடாத்தப்படும் சிங்கள மொழி மூலமான மாணவர் மன்றங்கள் என்பன தமது பேச்சாற்றலை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள உதவுவதுடன், மாதமிருமுறை நடத்தப்படும் அறிவுக் களஞ்சிய போட்டி நிகழ்ச்சி, விவாத அரங்கு, ‘திக்ரா’ சுவர் சஞ்சிகை,  விளையாட்டு வேளை, கல்விச் சுற்றுலாக்கள், வெளிக்களப் பயிற்சி முகாம்கள் என்பனவற்றின் ஊடாக அவர்களின் பல்துறை ஆற்றல் விருத்திக்கு ஊக்கமளிக்கப்படுகின்றது.

இங்கு அமைந்துள்ள கம்பியூட்டர் பயிற்சி நிலையம், பல்லாயிரம் நூல்களை உள்ளடக்கிய வசதியான வாசிகசாலை என்பன பொது அறிவு, ஆய்வுத்துறை என்பவற்றிற்கு பெரிதும் உதவுகின்றன. எமது கல்லூரியினால் வெளியிடப்படும் ‘திக்ரா’ காலாண்டு சஞ்சிகை எழுத்துத்துறையில் மாணவர்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான களமாகத் திகழ்வதுடன் இஸ்லாத்தை தூய வடிவில் எத்தி வைப்பதற்கான சிறந்த ஊடகமாகவும் ஜொலிக்கின்றது.

மேலும், வெளிநாட்டு இஸ்லாமியப் பல்கலைக் கழகம் ஒன்றுடன் இக்கல்லூரியை இணைத்து இங்கு பயில்கின்ற திறமையான மாணவர்களுக்கு உயர் கல்விப் புலமைப் பரிசில்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.